சிலர் அறக்கப் பறக்க ஓடுவார்கள்; தேடுவார்கள். ஆனால் எங்கே ஓடுகிறார்கள்? எதற்காக ஓடுகிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள்! அப்போதுதான் தலையைச் சொரிவார்கள்.
இப்படி எவ்வித குறிக்கோளும் தெளிவும் இல்லாமல் கண்டபடி ஓடித்திரிந்து விட்டு சுவரில் பந்தைப்போல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும் அவலத்தைக் காணலாம்.
சிலரைப் பார்க்கலாம். எவ்வித ஆர்ப்பாட்டமும் அலட்டலும் இல்லாமல் இருப்பார்கள்.இறுதியில் அவர்களே வெற்றி பெறுவார்கள். அது எப்படி?
ஒரு செயலில் ஏன்? எதற்கு? என்கிற தெளிவோடு ஈடுபடுபவர்களுக்குத்தான் தன்னம்பிக்கை வரும். அப்படிப்பட்டவர்களிடம்தான் அமைதியையும் நிதானத்தையும் நம்மால் பார்க்க முடியும்.
உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்லட்டுமா?
உங்களது மனதிற்குள் புதைந்திருக்கும் வைரக்கற்களைக் கண்டறியாமல் அவற்றை வெளியே தேடி அலைவதால் என்ன நன்மை அடைந்துவிட முடியுமா?
உங்களுக்கு எது வேண்டும் என்பதை அறியாமல் கிடந்து அலைவதால் பயன் விளைந்து விடப்போவதில்லை மாறாக இழப்புதான் ஏற்படும்.
இதை இன்னும் எளிமையாகச் சொல்லவா? சரி. நாம் பொருட்கள் வாங்கப் பேரங்காடிக்குப் போகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். செல்வதற்கு முன்னால் நமக்கு என்ன வாங்கவேண்டும் என்று ஒரு தாளில் எழுதிக்கொண்டு போனால் என்னவாகும்?
நமது பணம், நேரம், சக்தி அனைத்தும் மிச்சாகுமா இல்லையா? ஒன்றுமே குறிக்காமல் பேரங்காடிக்குச் சென்று பாருங்கள், அங்கே சென்ற பிறகுதான் எதை வாங்கலாம் எதை வாங்கக் கூடாது என்று தெரியாமல் திண்டாடுவோம்.
அப்படியே யோசித்துக்கொண்டே கண்ணில் பட்ட பொருட்கள் அனைத்தையும் பொறுக்கிக்கொண்டு வருவோம். பணத்தைக் கட்டிய பிறகுதான் வருத்தப்படுவோம். தேவையில்லாமல் கண்டதையும் கையில் காசில்லாத நேரத்தில் வாங்கி வந்து விட்டோமே என நம்மை நாமே நொந்துகொள்வோம்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. மனித முயற்சியால் நடக்கக்கூடியதென்றால் அதை நீங்கள் அடைவது என்பது பெரிய துன்பமோ தொல்லையோ கிடையாது.
உங்களுக்கு எது வேண்டும்? என்பதை மட்டும் நீங்கள் தீர்மானித்துவிட்டால் அதை அடைவது வெகு சுலபம். நீங்கள் தேட வேண்டியது , நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது எல்லாம் உங்களுக்கு என்ன தேவை? நீங்கள் எதை அடைய ஆசைப்படுகிறீர்கள்? என்பதுதான்.
அன்புள்ளங்கொண்ட மாணவர்களே! உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை எதிர்வீட்டுக்காரரோ, பக்கத்து வீட்டுக்காரரோ முடிவுசெய்யும் நிலைக்குத் தயவுசெய்து விட்டுவிடாதீர்கள்.
இதைப் பார்க்க கொண்டிருபக்கும் போதே, இப்பொழுதே சிந்தியுங்கள்! உங்களுக்கு எது வேண்டும்? ஏன் அதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்ற காரண காரியத்துடன் முடிவு செய்யத் தொடங்குங்கள்.
உங்களுக்கு எது வேண்டும்? சொல்லுங்கள்! படிப்பில் வெற்றியா? பணமா? புகழா? மகிழ்ச்சியா? நீங்கள் எதை விரும்பினாலும் அதை உங்களால் அடைய முடியும், எதை என்பதை மட்டும் முதலில் தீர்மானித்து விடுங்கள்.
திருவள்ளுவர் மிக அருமையாகக் கூறியுள்ளார். ஆம் குறளைப் பாடியுங்கள்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”
கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள். எது வேண்டும் என்பது தெளிவாகும்.
No comments:
Post a Comment